நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக ஆரம்பித்து பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்கள் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் விவேக்.தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் காமெடி என்பது சிரிக்க மட்டுமல்ல அதன் மூலமாக மக்களிடம் நல்ல சிந்தனையையும் வளர்க்க முடியும் என அவருடைய காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களையும் கொண்டு சேர்த்துள்ளார். தற்போதும் தொடர்ந்து பல படங்களில் குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக்கின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனை தான் உள்ளது. அவருக்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.