ஆரம்பித்தது பிக்பாஸ் சீசன் 4! இதோ உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் விவரம்

Vinoth

Updated on:

Bigg Boss Season 4

ஆரம்பித்தது பிக்பாஸ் சீசன் 4! இதோ உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் விவரம்

ஹிந்தியில் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் நான்காவது சீசன் இன்று(அக்., 4) துவங்கியது. கமலே இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பொதுவாக ஜுன் மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி, கொரோனாவால் இப்போது அக்டோபரில் துவங்கி உள்ளது. முன்னதாக போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்கும் முன்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்றைய நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி உடன் ஆரம்பமானது. கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக செயல்பட்டவர்களை கவுரவப்படுத்தி இந்த நிகழ்வில் வீடியோ காணோலி வாயிலாக பேச வைத்தனர். அதனைத்தொடர்ந்து போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி ஆரம்பமானது.

முதல் போட்டியாளர் ரியோ
பிக்பாஸ் சீசன் 4ல் முதல் போட்டியாளராக ரியோ ராஜ் உள்ளே நுழைந்தார். சின்னத்திரையில் பிரபலமான இவர், சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களில் நடித்துள்ளார்.

 


2வது போட்டியாளர் சனம் ஷெட்டி

இரண்டாவது போட்டியாளராக நடிகை சனம் ஷெட்டி உள்ளே நுழைந்துள்ளார். இவர் தமிழில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கடந்த சீசனில் பங்கேற்ற தர்ஷனின் காதலியாக இருந்து பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் விமர்சித்தவர் இப்போது அவரே போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

 

3வது போட்டியாளர் நடிகை ரேகா
மூன்றாவது போட்டியாளராக மாஜி ஹீரோயின் ரேகா உள்ளே சென்றுள்ளார். ஏராளமான தமிழ் படங்களில் நாயகியாக நடித்த இவர் இப்போது குணச்சித்ர நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்போது அதைத் தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

இதுநாள் வரை அடுத்தவர்களை நம்பியே என் வாழ்க்கையை நகர்த்தி வந்தேன். இப்போது நான் தனித்து செயல்படவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். நிறைய பேர் போக வேண்டாம் என்றனர். அதையும் மீறி நான் தனித்து நிற்க இதில் பங்கேற்றேன் என்றார் ரேகா.

 

4வது போட்டியாளர் பாலா
நான்காவது போட்டியாளராக பாலா என்பவர் உள்ளே நுழைந்தார். இவர் மாடலிங் மற்றும் பிட்னஸில் தேர்ச்சி பெற்றவர். பிட்னஸில் தனக்கான அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த போட்டியில் பங்கேற்றதாக பாலாஜி தெரிவித்தார்.

 

5வது போட்டியாளர் அனிதா சம்பத்
ஐந்தாவது போட்டியாளராக அனிதா சம்பத் உள்ளே நுழைந்துள்ளார். இவர் அனைவருக்கும் தெரிந்த முகம் தான். நிறைய டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இப்போதும் ஒரு டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ளார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

 

6வது போட்டியாளர் ஷிவானி
ஆறாவது போட்டியாளராக ஷிவானி நாராயணன் உள்ளே நுழைந்தார். இவர் சின்னத்திரையில் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கவர்ச்சியான போட்டோக்களாக சமூகவலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு தன்னை லைம் லைட்டிலேயே வைந்திருந்தார். இவரும் ஒரு போட்டியாளர் என ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் அவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்றுள்ளார்.

 

7வது போட்டியாளர் ஜித்தன் ரமேஷ்
ஏழாவது போட்டியாளராக நடிகர் ஜித்தன் ரமேஷ் உள்ளே நுழைந்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. சினிமாவில் வெற்றி பெற இந்நிகழ்ச்சியை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்த போவதாகவும், அதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் நகைச்சுவையாக இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்தது, ஒரு வித அழுத்தமாக இருந்தது. இப்படியே போனால் டைவர்ஸ் வாங்கிவிடுவேன் போல் உள்ளது என தெரிவித்தார். ரமேஷின் இந்த பேச்சை நாசுக்காக கண்டித்தார். எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை பார்த்து பேசுங்கள் என்றார்.

 

8வது போட்டியாளர் வேல்முருகன்
எட்டாவது போட்டியாளராக பின்னணி பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளார். தமிழில் ஏராளமான படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கிராமிய கலைகளையும் வளர உதவி வருகிறார்.

 

9வது போட்டியாளர் ஆரி
ஒன்பதாவது போட்டியாளராக நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளார். நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போதும் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனியாக அறக்கடளை தொடங்கி நிறைய மக்கள் சேவையை செய்து வருகிறார்.

 

10வது போட்டியாளர் சோம்
பத்தாவது போட்டியாளராக சோம் சேகர் என்பவர் பிக்பாஸ் போட்டியில் உள்ளே சென்றுள்ளார். இவர் ஒரு மாடல், டிவிக்களில் முயற்சி செய்து வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக குத்துச்சண்டை மாதிரியான எம்எம்ஏ., என்ற ஒரு விளையாட்டிலும் கைகேர்ந்த இவர், அதில் சாதிக்க இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

11வது போட்டியாளர் கேப்ரில்லா
பதினொறாவது போட்டியாளராக கேப்ரில்லா சார்லட்டன் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளார். 3 உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் விஜய் டிவியின் டான்ஸ் ஷோவிலும் பங்கேற்றார். இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

12வது போட்டியாளர் நிஷா
பன்னிரெண்டாவது போட்டியாளராக அறந்தாங்கி நிஷா, பிக்பாஸ் போட்டியில் உள்ளே நுழைந்துள்ளார். விஜய் டிவியில் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இவர் அதன்மூலம் பிரபலமானார். மாரி 2 படத்திலும் நடித்தார். சொந்த வீடு எனது கனவு. அது நிறைவேற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றார் நிஷா.

 

13வது போட்டியாளர் ரம்யா பாண்டியன்
பதிமூன்றாவது போட்டியாளராக நடிகை ரம்யா பாண்டியன் உள்ளே சென்றுள்ளார். இவரும் எதிர்பார்த்த ஒரு போட்டியாளர் தான். ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் மட்டுமே நடித்தவர். ஆனால் சேலையில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தவர். தொடர்ந்து இந்த டிவியில் நடந்த குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

 

14வது போட்டியாளர் சம்யுக்தா
பதிநான்காவது போட்டியாளராக சம்யுக்தா பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளார். மாடலிங் மற்றும் நடிகை ஆவார். நடிகை ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலில் இவர் நடித்துள்ளார்.

 

15வது போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி
பதினைந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டினுள் சுரேஷ் சக்ரவர்த்தி சென்றுள்ளார். நடிகரான இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போது யு-டியூப் சேனல்களில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு உண்டு.

 

16வது போட்டியாளர் ஆஜீத்
பதினாறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டினுள் உள்ளே சென்றிருப்பவர் ஆஜீத். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியரில் டைட்டில் பட்டம் வென்று குழந்தையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது வாலிபனாக இசையில் சாதிக்க துடிக்கும் இளைஞனாக மாறி தனக்கான வெளிச்சம் கிடைக்கும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

சண்டை, சச்சரவு, அழுகை, காதல் உள்ளிட்ட பல நாடகங்கள் இந்த நிகழ்ச்சியில் அரங்கேற இருக்கிறது. இனி அடுத்த 100 நாட்களுக்கு தமிழக மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக பிக்பாஸ் சீசன் 4 அமையும்.